சர்வதேச அளவிலும் வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கிய இடதுசாரிகள்! - EU
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலான தேர்தலிலும் இடதுசாரிகள் அடைந்துள்ள வீழ்ச்சி பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளதோடு, எதிர்கால அரசியல் யுக்தி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இடதுசாரிகள் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மத்தியில் இடம்பெற்ற ஆட்சி தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் மற்ற மாநிலங்களின் முடிவுகள் வேறு விதமாக அமைந்ததால் ஒரு வித திருப்தி உருவானது.
அவர்களின் ஆசுவாசம் சில நாட்களுக்குக் கூட நீடிக்கவில்லை. மத்திய அமைச்சரவை பதவியேற்ற அடுத்த நாளே மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருந்தது. இதில், ஆட்சி மொழியாக அல்லாத மாநிலங்களில் இந்தியைக் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கடும் கண்டனங்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த வரைவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய சூழலில், வரும் ஆண்டுகளில் இதுபோன்ற மாநில சுயாட்சியில் தொடர்ந்து மத்திய அரசு தலையீடு என்ற உள்ளுணர்வு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும், இந்த தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
அதேசமயம், சர்வதேச அளவில் அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிகள், இடதுசாரிகள் ஆகியவற்றின் கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தாலும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும்பான்மையை இழந்துள்ளது. தங்களுக்கென சட்டங்களை வகுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் நாடாளுமன்றத்தை 1952ஆம் ஆண்டு உருவாக்கியது. அதன்படி, 751 இடங்களுக்கு 28 உறுப்பு நாடுகளிலிருந்து ஐந்தாண்டுக்கு ஒரு முறை விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் தேர்தலில் பங்கேற்ற கட்சிகளின் பிரநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பொருளாதாரம், குடியேற்றம், பருவநிலை மாற்றம் ஆகியவை இந்த தேர்தலில் முன்வைக்கப்பட்ட மிக முக்கிய பிரச்னைகள் ஆகும். இதனைச் சுற்றியே பரப்புரைகளும் நடைபெற்றன. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஐரோப்பிய மக்கள் கட்சி எனும் வலதுசாரி கூட்டணி 179 இடங்களையும், சோசியலிஸ்ட் & டெமோகிரடிக் இடதுசாரி கூட்டணி 152 இடங்களையும் கைப்பற்றின.
இதேபோன்று, லிபெரல்ஸ் எனும் தாராளவாதிகள் ஒருங்கிணைந்த கூட்டணி 110 இடங்களிலும், கிரிண்ஸ் எனும் பசுமைக் கட்சிகளின் கூட்டணி 75 இடங்களிலும், ஐரோப்பியச் சுதந்திரம் மற்றும் நேரடி ஜனநாயகக் கூட்டணி 44 இடங்களிலும் வெற்றிபெற்றன. மேலும், பாப்புலிஸ்ட் கட்சிகள் 58 இடங்களில் பெறும் ஆதரவைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய முன்னணி நாடுகளில் வலதுசாரிகளையும், இடதுசாரிகளையும், பாப்புலிஸ்ட், பசுமைக் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது முன்பு எப்போதும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தேர்தல் முடிவுகளால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகள் சந்தித்து வரும் பிரச்னை எதிர்கொள்ள புதிய உத்வேகத்தை உருவாக்கும். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தேர்தலில் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக மாறும். குறிப்பாகப் பருவநிலை மாற்றம், குடியேற்றம் ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்படும் கொள்கைகள் முக்கிய பங்காற்றும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு தேர்தலிலும், இடது சாரிகள் வீழ்ச்சியடைய பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஸ்திரத்தன்மை இல்லாத அரசியல் பாதை, மக்களிடையே நம்பகத்தன்மை குறைந்தது ஆகியவையே பிரதானமாகக் கூறப்படுகிறது. உலகின் முக்கிய ஜனநாயகக் சக்தியாகக் கருதப்படும் ஐரோப்பிய ஒன்றியம் புது மாற்றத்திற்கு வித்திட்டுள்ளதால் இதன் தாக்கம் அசுர வளர்ச்சியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
Conclusion: