ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என, அந்நாட்டு மக்கள் 2016ஆம் ஆண்டு வாக்களித்தனர். அதன்பின், பிரிட்டன் வெளியேற்றத்தை (பிரெக்ஸிட்டை) சுமூகமானதாக்க, 2018 நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் - பிரிட்டன் இடையே 'பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம்' கையெழுத்தானது.
ஆனால், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த பிரிட்டன் எம்பிகள், அதை மூன்று முறை நிராகரித்துவிட்டனர். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு 2019 அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது பிரிட்டன் எம்பிகளின் ஆதரவை பெறமுடியாததால், தெரசா மே கடந்த ஜூன் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பிரெக்ஸிட் பிரச்னையை தீர்த்துவைக்க கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிரதமர் போரிஸ் தலைமையிலான அரசு, ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் (No deal Brexit) நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகக் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.
இதனிடையே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து பேச்சுவார்தை நடத்திவருகிறார். ஆனால், பிரக்ஸிட் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைபாட்டில் உறுதியாகவுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஐரோப்பிய ஒன்றியக் குழு தலைவர் டொனால்டு ட்ஸ்க், "ஐரோப்பிய ஒன்றியம் எப்போதுமே மற்ற தரப்பினருக்கு ஒத்துழைப்பு தர தயாராகத்தான் உள்ளது. ஆனால், ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் விவகாரத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கக்கூடிய திட்டங்களை கேட்கத் தாயார் என்றார்.
மேலும், வரலாற்றில் பிரதமர் போரிஸ் ஜான்சன் 'மிஸ்டர் நோ டீஸ் ' என்ற பட்டத்தை வாங்க மாட்டார் என்று நம்புகிறேன்" என எச்சரிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.