பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 100 வயது முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர் நேற்று (பிப். 2) காலமானார். கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் நாட்டு ராணுவத்தில் சேவை செய்தவர்.
100 வயதிலும் தொடர்ந்த சேவை
கோவிட்-19 பரவல் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது 100 வயதிலும் ஊக்கத்துடன் டாம் மூர் நிதி திரட்டிய சம்பவம் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவிட்-19க்காக நிதி திரட்ட முடிவுசெய்த டாம் மூர், அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்விதமாக ஒரு செயலில் ஈடுபட்டார். தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள நடைபாதையில் ஊன்றுகோலின் உதவியுடன் 100 முறை வலம்வந்து அதைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் பதிவை மூர் பகிர்ந்ததும் உலகளவில் வைரலானது.
குவிந்த நிதி மற்றும் பாராட்டு
டாம் மூரின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதி அளிக்கத் தொடங்கினர். பிரிட்டன் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான் என சர்வதேச நாடுகளிலிருந்து சுமார் 328 கோடி ரூபாய் நிதி கிடைத்தது. அவரது செயலுக்கு பிரிட்டன் இளவரசர் ஹாரி, பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மேலும், கடந்தாண்டு டாம் மூரின் பிறந்தநாளுக்கு ஆறாயிரத்துக்கும் மேல் பரிசுப்பொருள்களும், ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் வாழ்த்து அட்டைகளும் வந்தன. டாம் மூரின் மறைவுக்கு சர்வதேச சமூகம் அஞ்சலி செலுத்திவருகிறது.
இதையும் படிங்க: கடந்த ஓராண்டு காலத்தில் மக்களின் வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமா? அதிர்ச்சி ரிப்போர்ட்