ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரிட்டன் வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian + Exit = Brexit ) என்று அழைக்கிறார்கள்.
பிரிட்டன் வெளியேற்றத்தை சுமூகமானதாக்க ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரிட்டன் அரசு 'பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் எம்பிக்களின் ஆதரவைப் பெறமுடியாத காரணத்தால், தெரசா மே தன் பிரதமர் பதவியிலிருந்து கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, தெரசா மே பாதியில் விட்டுச் சென்ற பிரெக்ஸிட்டை முடித்துவைக்க பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளருமான போரிஸ் ஜான்சனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுத்து.
ஆனால், புதிதாக பதவியேற்ற பிரதர் போரிஸ் பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை (No Deal Brexit) நோக்கி அந்நாட்டை நகர்த்தி செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே, பிரெக்ஸிட் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளாதக்கூறி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் செப்டம்பர் கூட்டத்தொடரை ஒருமாதம் முடக்குவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.
இது பிரிட்டன் எம்பிக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரிட்டன் வீதிகள் போரிஸ் ஜான்சனுக்கு எதிரான போராட்டக்களமாக மாறின.
அதிருப்தி, கட்சித் தாவல், பெரும்பான்மை இழுப்பு:
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பிரிட்டன் நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது, ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை தடுப்பதற்கு மசோதாவைக் கொண்டுவரும் எம்பிக்களின் முயற்சிக்கு உதவும் முக்கிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு, ஆதரவாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்பிகள் 21 பேர் உள்பட 328 எம்பிகளும், அதனை எதிர்த்து 301 எம்பிகளும் வாக்களித்தனர்.
இது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஃப்ளிப் லீ என்ற எம்பி, லிபரல் டெமாக்கிரேட்ஸ் கட்சிக்கு தாவியதால் போரிஸ் ஜான்சன் அரசு பொரும்பான்மையை இழந்துள்ளது.
அடுத்து என்ன?
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள பிரிட்டன் எம்பிக்கள், ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டைத் தடுக்கும் வண்ணம் புதிய மோசாதா ஒன்றை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்வர்.
அரசுக்கு எதிராக வாக்களித்த ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 21 அதிருப்தி எம்பிக்கள் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டனில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.