பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த சம்பளம் பெறுவதால் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அவரால் இயலவில்லை எனவும், இதனைக் காரணம்காட்டி அடுத்தாண்டு அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பத்திரிகையில் கட்டுரையாளராக இருந்த அவருக்கு மாதம் 23 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய்) சம்பளமாக கிடைத்துள்ளது. பின்னர், தி டெலிகிராப் பத்திரிகையில் பணியாற்றிய அவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 75 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ளது. மாதத்திற்கு இரண்டு முறை மக்களிடையே உரை நிகழ்த்துவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம்) கிடைத்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக உள்ள அவருக்குத் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 402 யூரோ (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்) ஊதியமாகக் கிடைக்கிறது. அவரின் ஆறு குழந்தைகளில் சிலருக்குப் பணத் தேவை இருப்பதாலும் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க நிதி தேவைப்படுவதாலும் அவர் இந்த முடிவை எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
போரிஸ் விலகினால், அந்நாட்டின் சான்சலர் ரிஷி சுனக்குக்கு அடுத்த பிரதமராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென்னி மொர்டன்ட் ஆகியோருக்கும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவுசெய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நீண்ட இழுபறி நிலவியது. இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலைச் சந்தித்தார்.
2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்றது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: மழையில் உற்சாகமாக நடனமாடிய கமலா ஹாரிஸ்!