2018 நவம்பர் மாதம் பிரிட்டன்- ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையே பிரெக்ஸிட் (BREXIT-BRITIAN EXIT) ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், இந்த ஒப்பந்தமானது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மும்முறை நிறைவேற்றப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், ஒன்றியத்தைவிட்டு ஒப்பந்தமின்றி வெளியேறுவதற்கும் பிரிட்டன் எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
இதனிடையே, பிரிட்டன் வெளியேற்றத்திற்கு முன்னதாக வகுக்கப்பட்டிருந்த (2018 மார்ச் 29) காலக்கெடுவை, ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம். மேலும், இந்தத் தேதிக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எட்டப்படவில்லை என்றால் ஒப்பந்தம் ஏதுமின்றி பிரிட்டன் வெளியேறும் என எச்சரித்த ஐரோப்பிய ஒன்றியம், ஏப்ரல் 10ஆம் தேதி அவசரநிலை கூட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில், பிரிட்டன் வெளியேற்ற காலக்கெடுவை மேலும் நீட்டிப்பது குறித்த மசோதா நேற்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மெனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோரை பிரிட்டன் பிரதமர் தெரெசா மே இன்று சந்தித்துக்கவுள்ளார்.
இதற்கிடையே, பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின், அவரது குழுவினருடன் அந்நாட்டு அமைச்சர்கள் இன்று சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.