ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததையடுத்து, 2016ஆம் ஆண்டு பிரதமர் தெரெசா மே முயற்சியால் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவு கிடைக்கப் பெற்றதையடுத்து, 2019 மார்ச் 29ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசம் பிற உறுப்பு நாடுகளின் அனுமதியோடுஏப்ரல் 12ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் 29ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஒப்பந்தமும் தோல்வியைச் சந்தித்து. இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தியபின் பிரதமர் தெரெசா மே, பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான நான்கு மாற்றுவழிகள் குறித்து இன்று எம்.பி.க்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் தெரெசா மே கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பதவி விலகினார்.
பிரெக்ஸிட் விவகாரத்தால் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்துவரும் பிரதமர் தெரெச மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்தி ஆலோசிக்கிறார்.