ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் மைய வலதுசாரி கட்சியான மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி கட்சியான 'சுதந்திர கட்சி' ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மக்கள் கட்சியின் செபாஸ்ட்டியன் குர்ஸ் (sebastian kurz) வேந்தராகவும் (Chancellor), சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் (Heinz-Christian) துணை வேந்தராகவும் இருந்துவந்தனர்.
இந்நிலையில், துணை வேந்தர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் அரசாங்க ஒப்பந்தங்களை ரஷ்ய முதலீட்டாளர் ஒருவரிடம் பேரம் பேசிய வீடியோ ஜெர்மன் ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகின.
இந்த வீடியோ ஆஸ்திரியா நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தொடர்ந்து அழுத்தம் காரணமாக துணை வேந்தர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர், ஆட்சியைக் கலைத்துத் தேர்தல் அறிவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களே மேற்கொண்ட போராட்டத்தால், வேறுவழியின்றி வேந்தர் செபாஸ்ட்டியன் குர்ஸ் கடந்த மே மாதம் ஆட்சியைக் கலைத்தார்.
இந்நிலையில், இன்று அந்நாட்டில் உடனடித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில், வேந்தர் செபாஸ்ட்டியன் குர்ஸ் முன்னிலை பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என தெரிகிறது.
இதையும் படிங்க : பங்குச் சந்தைகளில் சீன நிறுவனங்கள் இடம்பெறுவதைத் தடுக்கமாட்டோம்: அமெரிக்கா உறுதி