அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களின் ரகசியங்களை, விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அமெரிக்காவில் வழக்குப் பதியப்பட்ட நிலையில், லண்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாகத் தஞ்சமடைந்த ஜூலியன் அசாஞ்சேவுக்கு அந்நாட்டு அரசு பாதுகாப்பை விலக்கிக் கொண்டதையடுத்து, அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில், 50 வார சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இவர் மீதான அரசு வழக்கு அமெரிக்காவில் உள்ளதால் அவரை நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டன் அரசிடம், அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பிரிட்டன் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் இதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இந்நிலையில், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது குறித்த விசாரணை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் நடைபெறும் என நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.