அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை சாமானியரும் அறிந்துக் கொள்ளும் வகையில் விக்கிலீக்ஸ் என்ற இணையத்தில் கசிய விட்டவர் ஜூலியன் அசாஞ்சே. இவரை கைது செய்து, மரண தண்டனை விதிக்க அமெரிக்கா தீவிரம் காட்டியது.
இந்நிலையில் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ச்சியாக அவரை கைது செய்ய அமெரிக்க தீவிரம் காட்டிய நிலையில், ஈகுவடார் மற்றும் லண்டன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார் அசாஞ்சே.
அப்போது அசாஞ்சேவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களுள் ஒருவர் ஸ்டெல்லா மோரிஸ். இவருடன் நெருங்கிப் பழகிய அசாஞ்சே, இரு குழந்தைகளுக்கு தந்தையானார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை ஸ்டெல்லா மோரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அசாஞ்சே, ஸ்டெல்லா தம்பதியினருக்கு இரண்டு வயதில் கேப்ரியல் மற்றும் ஒரு வயதில் மேக்ஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தற்போது இந்த உறவை வெளிப்படுத்தியது ஏன் என்பது குறித்தும் ஸ்டெல்லா விளக்கம் அளித்துள்ளார். அதில் அசாஞ்சே சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இதனை அறிவித்ததாக தெரிவித்தார்.
மேலும் ஸ்டெல்லா கூறுகையில், “48 வயதான அசாஞ்சே உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் அவர் இறக்கக் கூடும் என்று அஞ்சுகிறேன். ஆகவே அவரை பிணையில் (ஜாமீன்) விடுவிக்க வேண்டும்” என்றார்.