ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பில் 2016ஆம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார். இதற்கு எதிர்கட்சியான எம்.பி.,க்கள் மட்டுமல்லாது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் சிலரும் ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு மே 22ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த காலக்கட்டத்துக்குள் இது தொடர்பான ஒப்பந்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
இதன் விளைவாக தனது பதவியை ஜூன் 7ஆம் தேதி அன்று ராஜினாமா செய்வதாக அந்நாட்டு பிரதமர் தெரசா மே கண்ணீருடன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பிரிட்டன் அரசியலில் குழப்பம் நிலவும் சூழல் உருவாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.