பெட்ரிஞ்சா: ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடந்த 1880ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என அமெரக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவர்களை அவரச மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
மேலும், பெட்ரிஞ்சா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 25 பேருக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர்களில் ஆறு பேர் பலத்த காயங்களுடன் உள்ளதாகவும் தெரிகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தற்போதுவரை முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குரோஷியாவில் நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடங்கள்!