வரும் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. கரோனா குறித்து விவாதிக்கும் வகையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள், ஐநா உயர்மட்டத் தலைவர்கள், தடுப்பூசி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மக்கள், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் மீது கரோனா எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து உலகத் தலைவர்கள், சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் ஆகியோர் விவாதிக்கவுள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் அடார் பூனவல்லாவின் உரை அடங்கிய காணொலி டிசம்பர் 4ஆம் தேதி அங்கு ஒளிபரப்பப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி, பயோ என்டெக் நிறுவனத் தலைவர்கள் உகுர் சாஹின், ஓஸ்லெம் துரேசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி அணித் தலைவர் சாரா கில்பர்ட், கவி தி வாக்சின் அல்லையன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சேத் பெர்க்லி ஆகியோர் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலைப் புறக்கணித்த ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள்!