லியனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கத்தில் அமெரிக்காவின் வர்த்தக உயிர்நாடியான வால் ஸ்ட்ரீட்டை பற்றி 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'உல்ப் ஆப் தி வால் ஸ்ட்ரீட்'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ரிசா அஜீஸ். இவர் 'ரெட் கிரானைட்' என்ற படதயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாதின் வளர்ப்பு மகன். இவர் மீதும் இவரது தந்தை நஜிப் ராசத் மீதும் பணமோசடி குறித்த வழக்கு மலேசியாவில் நடந்து வருகிறது. அந்நாட்டு அரசு நிறுவனத்தின் நான்காயிரம் கோடி ரூபாய் நிதியை தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், இந்த நிதியில் தான் 'உல்ப் ஆப் தி வால் ஸ்ட்ரீட்' படம் எடுக்கப்பட்டதாகவும் இந்த மோசடியில் லியனார்டோ டிகாப்ரியோவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அமெரிக்காவில் நடந்த வழக்கில் 400 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வழக்கு முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரிசா அஜீஸ் நேற்று மலேசியா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது சகோதரி நூரியானா நஜ்வா, தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.