மெல்போர்ன்: ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது. ஆப்கன் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் பெரிதும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டி
முன்னதாக, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்றால் ஆடவர் அணியோடு நாங்கள் போட்டியிட மாட்டோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) கூறியுள்ளதாவது,"கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை உலகெங்கும் கொண்டு செல்லும் முனைப்பில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விளையாட்டு அனைவருக்குமானது என்பது எங்களது நோக்கம்.
ரஷித் கானும் ரோய் சமிமும்
ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களுக்கான விளையாட்டை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்கிறோம். பெண்கள் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் ஆடவர் அணியோடு ஹோபர்டில் திட்டமிடப்பட்டிருந்த போட்டியை நடத்த மாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளது.
ஆஸ்திரேலியா விளையாட்டுத் துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் இந்த பிரச்சினையில் ஐசிசி தலையிட வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் (ACA) தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. "ஆப்கானிஸ்தானில் இப்போது நடப்பது கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டிய மனித உரிமைப் பிரச்சினை.
ரஷீத் கான் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். அதேபோல்தான் ரோயா சமிம் மற்றும் அவரது சக வீராங்கனைகளை விளையாடுவதையும் நாங்கள் எதிர்பார்கிறோம். அதற்கு தடை விதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துள்ளது.
ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனை ரோயா சமிம் தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய இரண்டு நாள்களில் தனது இரண்டு சகோதரிகளுடன் கனாடாவுக்கு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாலிபான்களின் அமைச்சரவை: சிறுபான்மையினர், பெண்கள் கிடையாது