ஹாங்காங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்கும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணை நடத்தும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்ட வர அந்த பிராந்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதையடுத்து, அந்த சட்டத்திருத்த மசோதாவை நிறுத்திவைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.
ஆனால், சமரசமாகாத போராட்டக்காரர்கள் சட்டத்திருத்த மசோதாவை நிரந்தரமாக திரும்பப்பெறுதல், போராட்டகார்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை, ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் பதவி விலகல் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங் மக்களோடு, வழக்கறிஞர்கள், ஜனநாயக ஆதரவு எம்பிகள், விமான ஓட்டுநர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருப்பு உடை, முகமூடிகளுடன் நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமிக்கும் போராட்டக்காரர்கள், அவர்களை கலைந்து செல்ல வைக்க காவல் துறையினர் மேற்கொள்ளும் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு என ஹாங்காங்கே போராட்ட பூமியாக காட்சியளிக்கிறது.
இதனிடையே, சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமான நிலையத்திலும் போராட்டம் நடைபெற்ற வருகிறது.
போராட்டம் தொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம், "இந்த போராட்டங்களால் ஹாங்காங் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஹாங்காங்கை பொருளாதார வீழ்ச்சி சுனாமி போன்று தாக்கக்கூடும்" என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், ஹாங்காங்கின் விக்ரோடியா பூங்கா அருகே நேற்று மாலை அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் திடீரென கலவரம் வெடித்தது. அனுமதிக்கப்பட் பகுதியை தாண்டி முக்கிய சாலைக்குள் சில போராட்டக்காரர்கள் நுழைந்ததால் காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைந்துச் செல்ல வைத்தனர்.
இதேபோன்று, ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும், போராட்டக்காரர்கள் சிலரை காவல் துறையினர் கைது செய்தனர்.