பெஷாவர்: இஸ்லாமிய இயக்கங்களால் இடித்து எரிக்கப்பட்ட பரமஹன்ஸ் மகராஜ் சமாதியுடன் சேர்ந்த கோயிலை மீண்டும் கட்டித்தர கைபர் பக்துங்வா மாகாண அரசு முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணத்துக்குட்பட்ட பகுதி கராக். இங்கு இந்துமதத் துறவி பரமஹன்ஸ் மகராஜின் நினைவிடத்துடன் கோயில் ஒன்று உள்ளது. 1919ஆம் ஆண்டு, பரமஹன்ஸ் மகராஜ் இறந்த போது, எரியூட்டப்பட்ட இடத்தில் அவரது நினைவிடம் கட்டப்பட்டது. அந்த இடத்தில், அவரது பக்தர்கள் பல ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாகிஸ்தான் அரசின் அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும். இந்தக் கோயிலுக்கு கராக் பகுதியில் உள்ள தெர்ரி கிராமத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இச்சூழலில் 1997ஆம் ஆண்டு பரமஹன்ஸ் மகராஜ் நினைவிடம் தாக்கப்பட்டது.
இந்த நினைவிடத்தை மீண்டும் புனரமைக்க இந்துக்கள் முயன்றபோது அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர், அதை கைப்பற்றிக் கொண்டார்.
அதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கைபர் பக்தூங்வா மாகாண அரசு, பரமஹன்ஸ் மகராஜின் நினைவிடத்தை மீண்டும் கட்டிக் கொடுத்தது. இதனால் தெர்ரி கிராமத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கோயில் இடிப்பு
இதனால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அந்தக் கிராமத்தில் வாழும் ஜாமியாத் உலாமா - இ - இஸ்லாம் என்ற இஸ்லாமியக் கட்சி ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் 30, 2020) கோயிலை இடித்துத் தீ வைத்துக் கொளுத்தினர்.
இதனால் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
சர்வதேச அளவில் பிரச்னை வெடித்த நிலையில், உடனடியாக விரைந்து செயல்பட்ட கைபர் பக்துங்வா காவல் துறை, சம்பவம் தொடர்பாக 26-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தது. மேலும் பலரை தொடர்ந்து தேடி வருகிறது. 350க்கும் மேற்பட்டோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மீண்டும் கோயில்
இச்சூழலில், இந்தக் கோயில் தாமதமின்றி புனரமைக்கப்படுவதை எனது அரசாங்கம் உறுதி செய்யும் என்று கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் உறுதியளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.