ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 13 அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றது. 'இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியவர்களை வேட்டையாடுவோம்' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதையடுத்து சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது.
இந்த நிலையில்தான் இன்று (ஆகஸ்ட் 28) காலை, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நாட்டின் நங்ஹகர் மாகாணத்தில் நடைபெற்ற இந்த வான்வழித் தாக்குதலில், இலக்கை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்புப் படைத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
மேலும், காபூல் விமான நிலையத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதுக்குப் பதில் தாக்குதல் அமெரிக்கா நிகழ்த்தியுள்ளதால், அங்குப் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இதையும் படிங்க: காபூல் குண்டுவெடிப்பு: ஐநா கண்டனம்