ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்த சர்வதேச மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நான்கு நாள் பயணமாகப் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "காஷ்மீர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (47) செயல்படுத்தப்பட வேண்டும். மோதலை நிறுத்திக்கொண்டு இருநாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான்) சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாக உள்ளது.
முக்கியமாக, ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை, (அடிப்படை) சுதந்திரத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி காஷ்மீர் குறித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தில், ஜம்மு-காஷ்மீரில் சேராத பாகிஸ்தானியர்கள்/பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், அம்மாநிலத்துக்குள் ஊடுருவ முற்படும் நபர்களுக்கு பாகிஸ்தான் உதவியோ, ஆதயுதங்தளோ வழங்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அரசியலைப்புச் சட்டம் 370 பிரிவின் கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, நாடாளுமன்ற ஒப்புதலுடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான்-இந்தியா இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : 'காஷ்மீர் எங்களுக்கும் முக்கியம்தான்' - பகீர் கிளப்பிய துருக்கி அதிபர்