யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள மிருசுவில் பகுதியில் 5 வயது குழந்தை உள்பட 8 தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டார். இலங்கையில் கரோனோ வைரஸ் பெருந்தொற்று பரவி வரும் சூழலில் சிறையில் கரோனோ வைரஸ் தொற்று ஏற்படலாமென காரணம் தெரிவித்து கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் மிச்செல் பச்சலெட் கூறுகையில், "ரத்நாயக்காவுக்கு அளிக்கப்பட்ட பொது மன்னிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு தோல்வி அடைந்துள்ளது" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லி, ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்ட செய்தி வருத்தமளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
இலங்கை இறுதி கட்ட போரின்போது 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழர்களை கொன்றவருக்கு சிங்களப்பேரினவாத இராணுவ வீரருக்கு அரசு காட்டிய கருணை! ஒர் அலசல்