ஆப்கானிஸ்தானில் ஷம்ப்வத் பகுதியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நேற்று மதியம் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இது குறித்து கோஸ்ட் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ஃபத்தா கூறுகையில், "கால்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென்று குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் உரியிழந்தனர்" என்றார்.
முன்னதாக சனிக்கிழமை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறியிருந்தார்.
இருப்பினும், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் மீதான தங்களின் தாக்குதல் தொடரும் என்று திங்கட்கிழமை (மார்ச் 2) கூறியிருந்தது. இதன் காரணமாக, இத்தாக்குதலுக்கும் தலிபான்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.