அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின், 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை படையெடுத்த அமெரிக்கா, அங்கு நடைபெற்ற தலிபான் ஆட்சியை அகற்றி புதிய அரசை நிறுவியது.
இதையடுத்து, அமெரிக்க அரசுக்கும், தலிபான் பயங்கரவாத படையினருக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாகக் கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்க தலைமையிலான நாட்டோ படையினரை திரும்பப்பெற வழிவகை செய்யும் நோக்கிலும், அமெரிக்கா-தலிபான் இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான், தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது.
இதனிடையே, இந்தப் பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமெனில் ஆப்கானிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள தலிபான் கைதிகளை விடுவிக்குமாறு அந்நாட்டு அரசை தலிபான் அமைப்பு வலியுறுத்தியது.
இதன்பேரில், ஆயிரத்து 500 தலிபான் கைதிகளை படிப்படியாக விடுவிக்குமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி நேற்று உத்தரவிட்டார்.
ஆனால், இதனை ஏற்க மறுக்கும் தலிபான் அமைப்பினர், ஐந்து ஆயிரம் கைதிகளை விடுவிக்குமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தலிபான் அரசியல் விவகாரங்களுக்கான செய்தித்தொடர்பாளர் சுஹெல் ஷாஹீன் கூறுகையில், "அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமெனில், ஐந்து ஆயிரம் கைதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை பிறக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "அமெரிக்காவுடன் தலிபான் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தில் ஒரு மாறுதலைக் கொண்டு வர நினைத்தால் கூட, அதனை விதிமீறலாகவே பார்க்கப்படும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க : ரஷ்ய அதிபராக புடின் நீண்ட காலம் நீடிக்க வழிவகுக்கும் மசோதா - ஒரு மனதாக நிறைவேற்றம்