ஆப்கானிஸ்தானில் ஹிஸ்பே வாஹ்தாத் (ஒன்றமை கட்சி) நிறுவனர் அப்துல்லா அலி மஸாரி, கடந்த 1995ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இவரது நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைநகர் காபூலில் நேற்று நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் திடீரென கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாசிரா என்ற 15 வயது சிறுமி கூறுகையில், "அப்துல் அலி மஸாரின் நினைவு தின நிகழ்ச்சிக்கு முதல்முறையாக என் தந்தை, தங்கையுடன் சென்றிருந்தார். கூட்டத்துக்கு நடுவில் நாங்கள் நின்றுக்கொண்டிருந்த போது துப்பாக்கியால் யாரோ சுடும் சத்தம் கேட்டது.
இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு துப்பாக்கிச் சுடும் சத்தம் நிற்கவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அரசியல்வாதிகள் கான்வாயில் பாதுகாப்பாக ஏறி சென்றுவிட்டனர். அப்பாவி மக்களே குண்டடிப்பட்டு பலியாயினர்" என்றார்.
சம்பவத்தின்போது, காலில் குண்டடிப்பட்டு மயமக்கமடைந்த சிறுமி பாசிரா பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கும், அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுதற்கும் தலிபான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, வரும் மார்ச் 10 (செவ்வாய்கிழமை) முதல் ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் சூழலில், அந்நாட்டில் தலிபான்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் தலிபான்களின் வெறிச் செயல் அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியப் பிறகு, தலிபான்கள் அமைதியைக் கடைப்பிடிப்பார்களா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் நிழலாடுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்த கொடூர கொரோனா!