கராச்சி : பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலூச் மாகாணத்தில் வியாழக்கிழமை (அக்.7) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
300க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். நிலநடுக்கம் நடந்த இடத்தில் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
நிலடுக்கமானமானது ஹர்னாய் பகுதியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. நிலநடுக்கத்தில் பெண்கள், குழந்தைகள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் குவெட்டா, சிபி, ஹர்னாய், பிஸ்கின், சய்யூல்லா, சாமன், ஸியாரத் மற்றும் ஸிஹாப் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்பட்டது. நிலநடுக்கமானது அதிகாலை 3.20 மணியளவில் நடந்துள்ளது என அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து ஹர்னாய் பகுதியின் துணை ஆணையர் ஸோகைல் அன்வர் ஹாஸ்மி கூறுகையில், “கட்டட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஹர்னாய் பகுதியில் கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 70 வீடுகள் வரை இடிந்துள்ளன. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றிருக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க : 'ஆப்கனில் முனைவர், இளங்கலை பட்டங்கள் செல்லாது'- கல்வி அமைச்சர்!