இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.
இதில், பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சவும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவும் முன்னிலை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
இவர்களைத் தவிர, 35 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இத்தனைப் வேட்பாளர்கள் களமிறங்கியது இதுவே முதன்முறையாகும்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் நேற்று மாலை முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், கோத்தபய ராஜபக்ச 52.87 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 39.67 விழுக்காடு வாக்குகள் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், "அதிபர் தேர்தலில் வெற்றி முகப்பில் உள்ள கோத்தபய ராஜபக்சவிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்கிறேன்." என சஜித் பிரேமதாச தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.