உரிமை மீட்பு போர் என்பது மக்களுக்காக கொடுக்கப்பட்ட சுதந்திரமாகவே பார்க்க முடிகிறது. எக்குடி மக்களும் இம்மாதிரியான சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு, பல ரத்தக்கறை படிந்த வடுக்களை சாட்சியாக வைத்து தான், தங்களின் உரிமைகளை மீட்டிருக்கின்றனர் . மக்கள் தங்கள் உரிமைகாக குரல் கொடுப்பர்; அரசு ஏற்கவில்லை எனில் போர் புரிவர். இதுவே நாம் கடந்து வந்த வரலாறும் தெளிவுபடுத்துகிறது.
தமிழீழ விடுதலை போர்...
அவ்வண்ணமே உரிமைக் குரல் எழுப்பும் மக்களுக்கு அரசு செவி சாய்க்கிறதா என்பதில் எழுகிறது, அபாய மணி. ஆம், வரலாற்றின் பல சான்றுகள் இதனை உறுதிபடுத்தியுள்ளன. அறவழிப்போராட்டம் ஆயுதவழிப் போராட்டம் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் அதில் ஒன்று. அது தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும், சிங்களப்பேரினவாத இலங்கை அரசுக்கும் இடையே நடந்த ஐந்தாம்கட்டப் போரின் மூலமாக சர்வதேச அரசியல் தளத்திற்கு நகர்ந்தது. அதற்கு அவர்கள் தந்த விலை ஒன்றரை லட்சம் தமிழர்களின் உயிர்.
சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை, கொத்துக் குண்டுகளை போர் நெறிமுறைகளை மீறி, மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் வீசி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என ஏராளமானோரை கொன்று குவித்தது சிங்களப்பேரினவாத இலங்கை அரசின் அசுர ராணுவம்.
தமிழ்நாட்டில் மீண்டு(ம்) ஒலிக்கும் ஈழ தமிழர் படுகொலை விவகாரம்!
மனித உரிமை மீறல்...
முள்ளிவாய்க்காலில் தமிழினத்தைக் கூண்டோடு அழித்த இலங்கை ராணுவத்தின் 'மனித உரிமை மீறலை' சர்வதேச நாடுகள் கண்டித்தன. 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்படுகொலை குறித்த விசாரணை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.
அதில், 'சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட தன்னாட்சியான நீதி விசாரணை இலங்கையில் நடத்த வேண்டும்' என்று 2015ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இதுவரை இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகைசெய்யப்படும்' என்ற அவர்களின் உறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானமும் கிடப்பில் தான் கிடக்கிறது.
பிஞ்சு குழந்தையையும் நசுக்கி எறிந்த ராணுவம்...
இதனிடையில் 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மிருசுவில் ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, வில்வராஜா பிரசாத், நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன், ஞானச்சந்திர சாந்தன் ஆகிய எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். ராணுவத்தின் அனுமதியுடன் அவர்தம் வீடுகளுக்குள் சோதனை என்ற பெயரில் சென்ற ராணுவ படைப் பிரிவைச் சேர்ந்த 14 ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களும் இராணுவத்தினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரை கைது செய்யக்கோரி மனித உரிமை அமைப்புகள், தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த அழுத்தத்தின் காரணமாக ரத்நாயக்க உள்ளிட்ட 14 ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், 13 ஆண்டு விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் 2015ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்ச் சமூகத்தை கலங்கடிக்கும் விதமாக கரோனா நோய்க் கிருமித் தொற்றை முன்னிலைப்படுத்தி, குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சவின் தனிப்பட்ட பொதுமன்னிப்பு அதிகாரம் மூலம், சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
கரோனா தொற்று : 8 தமிழர்களை கொன்ற சிங்கள ராணுவ சிப்பாயை விடுதலை செய்த இலங்கை அரசு!
போர் நிறுத்தத்தால் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன...
இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவு பெற்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தமிழர்களின் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பறிக்கப்பட்டு அங்கு சிங்கள ராணுவத்தினரும், சிங்கள மக்களும் குடியமர்த்தப்பட்டனர்.
போரின்போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள், தமிழ் மக்களின் நிலை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இது தொடர்பாக ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கோத்தபய ராஜபக்ச அளித்த பதில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது அவர், “2009 ஆம் ஆண்டின் இறுதிப்போரில் காணாமல் போனவர்கள், இனி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை அவர்கள் இறந்ததாக விரைவில் சான்றிதழ் வழங்கப்படும்” என்றார்.
கைது செய்யப்பட்ட போராளிகள் 104 பேர் விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இன்னும், எத்தனை பேர் முடமாக்கப்பட்டனர், தடுப்புச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமலே மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்குப் பின் பதவியேற்ற மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு, தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழர்கள் மீதான போரை தற்போதும் இலங்கை அரசு மறைமுகமாக நடத்தி வருவதாகவே தெரிகிறது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
பல காலங்களாக தமிழ் குடிகளை அழித்தொழித்து, போர் குற்றம் புரிந்தவர்களையும் தண்டிக்காமல் ஒருசார்ந்த சிந்தனையோடும், வன்மத்தோடும்; அதாவது தமிழ் மக்கள் எவ்விதத்திலாவது ஒடுக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு மட்டுமே சிங்கள அரசும், ராணுவமும் செயலாற்றிவருகிறது என்பது உலக அமைப்புகள் அறிந்ததே. ஆனால், இதனை எக்கணமேனும் உடைத்தெறிந்து தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று உலக முழுதும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து சர்வதேசத் தளங்களில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதை நாம் காணமுடிகிறது. மக்களின் உரிமைகளை அபகரிக்க நினைக்கும் எந்த அரசும் இங்கு நிலைபெற்றது இல்லை என்பதே இத்தொக்குப்பின் உயிர்மொழி.