கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளையொட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள மூன்று தேவாலயங்கள், சொகுசு விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டன. இதில் 260-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உலகையே உலுக்கிய இக்கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு தேவாலய பாதிரியார்கள் ஆலய மணியை அடித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மக்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே நினைவு தினத்தை அனுசரிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
இதுகுறித்து கொழும்பு தலைநகருக்கான பேராயர் கார்டினல் மெல்கம் ரன்ஜித் கூறுகையில், "இத்தாக்குதல் நடக்கப்போவதாக முன்னதாக எச்சரிக்கை விடுத்த அண்டை நாடுகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இத்தகவல்களை நம் அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை.
குறிப்பாக, தாக்குதலில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கிறோம். தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், இனத்துடனும் தொடர்புப்படுத்தி பார்க்ககூடாது" என்றார்.
ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குத் தொடர்புடையதாக அந்நாட்டு முன்னாள் மத்திய அமைச்சரின் சகோதரர், 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : 'வெள்ளை நாள்', 'கறுப்பு நாள்' கடைப்பிடிக்க ஐ.எம்.ஏ அழைப்பு!