இலங்கையில் ஜனவரி 27ஆம் தேதி கரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்ததையடுத்து மார்ச் இறுதி வாரம் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி இலங்கையிலும் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் பகல் நேரங்களில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.
இது கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பாஹா ஆகிய மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கொழும்பு, கம்பாஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவை கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மே 11ஆம் தேதி ஊரடங்கில் முதல்கட்டமாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் பணிக்காக வெளியே செல்ல அனுமதி தரப்பட்டிருந்தது.
இலங்கையில் கோவிட்-19 தொற்றால் இதுவரை 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்ரிக்காவில் ஒரு லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு