2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை அடுத்து இலங்கையில் தமிழின சமூகத்துடன் நல்லிணக்கத்தை அடைவதற்கான முன்முயற்சியாக 'ஸ்ரீலங்கா தாயே...' எனும் இலங்கை தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் இலங்கையில் அப்போது ஆட்சியிலிருந்த சிறிசேனா - ரணில் தலைமையிலான கூட்டு நல்லாட்சி அரசாங்கம் தேசிய கீதத்தை தமிழில் பாட வழிவகை செய்தது.
இந்நிலையில் புதிதாக பதவியேற்ற இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், இனி இலங்கையின் சுதந்திர தின விழாவில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என அறிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை அரசின் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், 'இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் எவ்வாறு ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறதோ அதுபோன்று இலங்கையிலும் இனி ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படும்' எனத் தெரிவித்திருந்ததாக அந்நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர தின விழா நடத்துவது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அரசியலமைப்புச்சட்டம் சிங்கள மற்றும் தமிழ் இரண்டிலும் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதி வழங்குகிற நிலையில், பெரும்பான்மைமிக்க சிங்கள மக்களுக்கு மட்டுமே ஆட்சி அதிகார நிர்வாகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழர்கள் தரப்பில் சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டு இப்போது நிரூபணமாகியுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பதிப்பாகச் சேர்ப்பதன் மூலம் அவர்களை அங்கீகரிப்பதற்கான அடையாளச் சமிக்கையை 2016ஆம் ஆண்டில் தமிழர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்க்கட்சியாக அணிவகுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு அடிப்படை உரிமை மீறல், மனுவை இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : 909 ஆண்டுகளுக்கு பிறகு வந்த பாலிண்ட்ரோம் தினம்: '02-02-2020' அடடே...!