கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் கோவிட் 19 வைரஸின் தாக்கம், தற்போதுதான் அதிகரித்துள்ளது.
தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 84 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கும் குறைவான நபர்கள் இந்த வைரஸ் தொற்றால் தென் கொரியாவில் பாதிக்கப்படுவது, இது மூன்றாவது நாளாகும். இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,320ஆக உயர்ந்துள்ளது.
சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளுக்குப் பின், அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா திகழ்கிறது. தென் கொரியாவில் வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் விகிதமும் 0.99 ஆகவே உள்ளது. சர்வதேச அளவில் இந்த சராசரி 2 விழுக்காடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று மட்டும் 264 பேர் சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தென்கொரியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,401 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவைத் தடுக்க நடைபெற்ற மத நிகழ்ச்சியால் 46 பேருக்கு வைரஸ் தொற்று!