இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை எட்டு இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கிடையே கடந்த திங்கட் கிழமை காலை கொழும்பு விமான நிலையம் அருகில் ஒன்பதாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே இந்தியா எச்சரித்தும் இலங்கை அதில் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்தியா எச்சரித்தது என்பதை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு மாநகரின் வெள்ளவத்தை பகுதியில் இருக்கும் சவாய் திரையரங்கு அருகே சந்தேகத்திற்குரிய முறையில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அந்நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய, அந்நாட்டு ராணுவ அமைச்சர் ரூவென் விஜேவர்தன, "தேசிய தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து பிரிந்த ஒரு குழுவுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. விசாரணை நீடிப்பதால் சதி செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது. உயிரிழந்த 359 பேரில் 39 பேர் வெளிநாட்டினர்” என்றார்.