உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் கடுமையாக திணறிவரும் நிலையில், தென் கொரியா தனது இடைக்காலத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி சாதித்துள்ளது. கரோனா பாதிப்பால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீவிரமான பாதிப்பை சந்தித்துள்ளதால், அங்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப்போனது.
அதேவேளை கரோனா பாதிப்பை சமாளிக்கும் விதமாக விரைந்து செயல்பட்ட தென் கொரியா, நேற்று வெற்றிகரமாக தேர்தலை நடத்தியது. உலகளவில் அதிவேக தீவிர பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளில் உலகிற்கு முன்மாதிரியாக திகழும் தென் கொரியா, சரியான தனி நபர் விலகலுடன் நடத்திய தேர்தலில் 4.4 கோடி வாக்காளர்கள் நேற்று வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அதிபர் மூன்-ஜே-இன் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில், 180 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையை எளிதாக பெற்றது. 1987ஆம் ஆண்டுக்குப் பின் ஜனநாயக நாடாக உருவெடுத்த தென் கொரியாவின் தேர்தல் வரலாற்றில் ஆளும் கட்சி இதுபோன்று அதிக இடங்களில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறைாயகும்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம் தவறு: ட்ரம்ப் முடிவுக்கு ஐநா தலைவர் கண்டனம்