இது குறித்து சிங்கப்பூர் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், "நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாத 528 பேருக்கு கரோனா தீநுண்மி இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியர்கள் உள்பட பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். எட்டு பேர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.
இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் உள்ள மூன்று லட்சத்து 23 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 12 ஆயிரத்து 183 பேருக்கு கரோனா தீநுண்மி இருப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குமிடங்களில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் கடந்த வாரம் சராசரியாக ஒருநாளில் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அது தற்போது 20ஆக குறைந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் இதுவரை 14 ஆயிரத்து 951 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 14 பேர் இத்தொற்றால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா தீநுண்மி பெருந்தொற்றால் இதுவரை 30 லட்சத்து 76 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 941 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா இல்லாததால் மருத்துவமனைகளை மூடும் சீனா