'நான் வெஜ்' பிரியர்கள், சிக்கன் வேட்டையில் புகுந்து விளையாடுவார்கள். தற்போது, அவர்களுக்கு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்டெம் செல் தொழில்நுட்பம் அடிப்படையில் செயற்கையாக அதாவது குளோனிங் மூலம் உருவாக்கப்படுகிறது. இதனை, மக்களுக்கு விற்பனைசெய்ய முதல் நாடாக சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் செயற்கை சிக்கனை விற்பனைசெய்யும் உரிமம், கலிஃபோர்னியா உணவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஈட் ஜஸ்டுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய ஈட் ஜஸ்ட் தலைமை நிர்வாக அலுவலர் ஜோஷ் டெட்ரிக், "இந்தச் செயற்கை சிக்கன் சிங்கப்பூரில்தான் தயாரிக்கப்படவுள்ளது. விரைவில், உணவகங்களில் விநியோகிக்கப்படும்.
இந்தச் சிக்கனின் விற்பனை விலை முதலில் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், விலை குறைக்கப்படும். இந்தத் திட்டத்தில் வெற்றியடைய, நிச்சயமாக குறைவான விலையில்தான் விற்பனை செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய செயற்கை சிக்கனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.