நியூசிலாந்தின் சர்ச் கிரைஸ்ட் நகரில் கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இரண்டு மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். 49 பேர் படுகாயமடைந்தனர்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் நடந்து சில நாட்களில் 28 வயதான பிரென்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டார்.பின்னர், அவர் மீது தீவிரவாத ஒழிப்பு, குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து சர்ச் கிரைஸ்ட் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி குற்றவாளி பிரென்டன் டாரன்ட் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தது.
நீயூசிலாந்தில் தீவிரவாத வழக்கில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாகக் குற்றவாளியின் தண்டனை விவரங்கள் அறிவிப்பதை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க : 'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்