நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இணையமயம் ஆகிவிட்ட இந்த காலத்தில், நம் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது இணையப் பயன்பாடு. தினசரி நாம் இணையதளத்திலும், இணைய சேவையில் இயங்கும் ஆப்களிலோ செலவிடும் நேரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இத்தகைய சூழலில் இணையத்தில் நம் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. இருப்பினும் தகவல்களை உள்ளிடாமல் நம்மால் இணைய சேவையை பயன்படுத்த முடியாது என்பதால் அதை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும், இரண்டாவது மாதத்தில் இரண்டாவது வாரத்தின் இரண்டாவது நாள் இணைய பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று , பிப்ரவரி 5-ம் தேதியான இன்று இணைய பாதுகாப்பு தினம் கொண்டாடப்டுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு கூகுள் வலைதளம் தனது முகப்பு பக்கத்தில் 'Security Checkup' என்ற ஒன்றை இணைத்துள்ளது. இந்த 2 நிமிட சேவையை பயன்படுத்தி தங்களின் கூகுள் அக்கவுண்டின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் உட்பட மொத்தம் 7 மொழிகளில் கூகுள் இந்தியா நிறுவனம் #SecurityCheckKiya என்ற இந்த புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக இணையத்தில் உங்கள் தரவுகளை பாதுகாக்க கூகுள் நிறுவனம் வழி வகுக்கின்றது. மேலும், இன்று ஒரு நாள் மட்டும் இணைய பாதுகாப்பு குறித்து அறிந்து வைத்துக் கொள்ளாமல், இந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பயன்பாட்டை தெரிந்துக் கொண்டு தினமும் பயன்படுத்தினால் நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.