சீனாவிலிருந்து பரவிய கரோனா தொற்று தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், ஸ்புட்னிக் வி (SPUTNIK V) என்ற கரோனா தடுப்பு மருந்தை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார்.
மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை முழுமையாக முடிவடையாத காரணத்தால் ஸ்புட்னிக் வி நம்பகத்தன்மை குறித்து உலக விஞ்ஞானிகள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே, ஸ்புட்னிக் வி என்ற கரோனாவுக்கான மருந்தை பெரிய அளவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்பட ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன், சுகாதார ஆராய்ச்சித்துறை செயலாளர் மருத்துவர் பல்ராம் பார்கவா, உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர் ராணு ஸ்வரூப் ஆகியோரை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலாய் குடஷேவ் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ஸ்புட்னிக் - வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா கண்டுபிடித்த மருந்து குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா ஏற்கனவே தெரிவித்திருந்தது.
கரோனா மருந்தை கண்டுபிடித்த ரஷ்யாவின் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையங்களின் விஞ்ஞானிகளை இந்திய தூதரக அலுவலர்கள் தொடர்பு கொண்டு பேசிவருகின்றனர்.