கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு நேபாளத்தின் போகாராவுக்கு சுற்றுலா சென்றது. அங்கு, கடந்த திங்கள் கிழமை இரவு எவரெஸ்ட் பனோராமா என்ற சொகுசு விடுதியில இவர்கள் தங்கினர்.
இதில், பிரவீன் கிருஷ்ணன் நாயர்-சரண்யா , ரஞ்ஜித் குமார்-இந்து லட்சுமி ஆகிய தம்பதியினர் தங்களது குழந்தைகள் உள்ளிட்ட எட்டு பேர் ஒரே அறையில் தங்கினர்.
அடுத்த நாள் காலை (செவ்வாய்க்கிழமை) இந்த அறையில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே எட்டு பேரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விடுதி அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியபோது, அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த எட்டு பேரின் உடல்கள் கேரளா மாநிலத்துக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.
பிரவீன்-சரண்யா தம்பதி அவர்களது குழந்தைகள் மூன்று பேரின் உடல்கள் திருவனந்தபுரத்துக்கும், ரஞ்ஜித் குமார்-இந்து லட்சுமி பீதாம்பரம் தம்பதியினர், அவர்களது குழந்தைகள் உடல்கள் கோழிக்கோடுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நேபாள சுற்றுலாத்துறை ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு 15 நாட்களில் அதன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதையும் படிங்க : அமேசான் உரிமையாளரின் செல்போனை ஹேக் செய்த சவுதி இளவரசர்!