ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தானது கடந்த 5ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது. மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியின் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளை முறித்துக்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கும் பாகிஸ்தானின் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அதே சமயத்தில், பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இருதரப்பு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவோடு நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி விருப்பம் தெரிவித்துள்ளார்.