அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்ற காலத்தில், இருநாடுகளும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை ஒருவர் மீது ஒருவர் தாக்குவதற்குத் தயாராக வைத்திருந்தனர்.
இதனால், இரு வல்லரசு நாடுகளும் அணு ஆயுதப் போரில் ஈடுபடுவதற்கான அபாயம் எழுந்தது. இதையடுத்து, 1981-ல் இருதரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்விளைவாக, 1987ஆம் ஆண்டு நடுத்தர தொலைவு ஏவுகணைகளைக் கைவிட அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒப்பந்தமிட்டன.
நடுத்தர தொலைவு அணுஆயுத ஏவுகணை கைவிடல் (Intermediate-range Nuclear Forces Treaty ) என்று பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் படி, தங்களிடம் ஏற்கனவே இருந்த நடுத்தர ஏவுகணைகள், அதற்குத் தேவையான சாதனங்கள், வாகனங்களை ஆகியவற்றை எதிர்தரப்பினரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அழிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா மீறுவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, தற்போது இந்த அணு ஆயுதங்களை கைவிடும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான சட்ட மசோதாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை விட, நடுத்தர தொலைவு ரக ஆயுதங்கள் இலக்கை கடுமையாக சீர்குலைக்கும் வல்லமை கொண்டதாக கருதப்பட்டது. ஏனெனில், அது குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையக் கூடிய திறன் படைத்தது.