பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள கில்கிட்-பால்டிஸ்தான் தொடர்பில் அந்நாட்டு அரசு, திருத்த ஆணை (2020) ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில், என்ற உத்தரவை கடந்த மாதம் நவம்பர் 15 ஆம் தேதி கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை பாகிஸ்தான் அரசு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியை, ஐந்தாவது மாகாணமாக பிரிக்கும் திட்டத்தின் முதல்கட்ட நகர்வாக பாகிஸ்தான் அரசு இதனை மேற்கொள்வதாக அறிய முடிகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்-பால்டிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கில்கிட் பால்டிஸ்தானின் சட்டப்பேரவைக் கூட்டம் சபாநாயகர் அம்ஜத் உசேன் ஜைதி தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அம்மாகாண முதலமைச்சராக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஹம்மது காலித் குர்ஷித் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பி.டி.ஐ மற்றும் மஜ்லிஸ் வஹதத்-இ-முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்த 22 உறுப்பினர்களின் ஆதரவில் குர்ஷித் கான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில், ஜாமியத் உலமா-இ இஸ்லாம் (எஃப்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிகளில் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அம்ஜத் உசேன் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான அம்ஜத் உசேன், கில்கிட் பால்டிஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தானில் தேர்தலை பாகிஸ்தான் நடத்தியிருப்பது, அந்த பிராந்தியத்தில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்கான பாகிஸ்தானின் தந்திர நடவடிக்கை என இந்திய அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரசியலில் நுழைந்தார் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரதமரின் இளைய மகள்