கராச்சி - பாகிஸ்தான்: கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. கரோனாவை விரட்டியடிக்கத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பணி பல நாடுகளில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாததால், மக்களை ஈர்த்திட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஆனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய யுக்தியைக் கையாள உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திட விருப்பம் காட்டாதவர்களின் சிம்கார்டு இணைப்புகள் முடக்கப்படும் என அம்மாகாண அரசு எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் முதல் தவணை தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது தவணையைச் செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டாததும் இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இதுவரை 95 லட்சத்து 59 ஆயிரத்து 910 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.