டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானார். இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவருடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு சீன அரசு அஞ்சலி செலுத்தியுள்ளது. அவரது இழப்பு இந்திய-சீன நட்பிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
தனது 50 ஆண்டுகால அரசியலில் அவர் சீனா-இந்தியா உறவுகளுக்கு பல்வேறு சாதகமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் (2014 ஆம் ஆண்டு) பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் நெருக்கமான வளர்ச்சி மற்றும் கூட்டாண்மையை உருவாக்குவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டதை நினைவுகூர்ந்தார்.
மேலும், இந்திய அரசாங்கத்திற்கும், பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.