ஹாங்காங் தலைவரை அந்நாட்டு மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2014ஆம் ஆண்டு ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராட்டம் ஹாங்காங்கில் முன்னெடுக்கப்பட்டது.
இது குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. இதில், சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று நாளடைவில் லட்சக்கணக்கானோர் இணைந்து கொண்டனர்.
இந்த சூழலில் ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் மசோதா ஒன்றை 2019ஆம் ஏப்ரல் மாதம் அந்நாடு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக் குழுவினர், அட்மிரால்டி பகுதியில் அமைந்துள்ள அரசாங்க கட்டடம் மீது செங்கல் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, ரசாயனப் பொருள்களைத் தெளித்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
இதற்கிடையில், ஆயிரக்கணக்கான ஜனநாயக சார்பு ஆதரவாளர்கள் நகரத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றதையடுத்து, காவல்துறையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை முற்றியுள்ளது.
குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை சீனாவுக்கு விசாரணைக்காக அனுப்ப அனுமதிக்கும் மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் அரசாங்கம் இந்த மாதம் உறுதியளித்தது.
ஆனால் எதிர்ப்பாளர்கள் நகரத் தலைவர்களுக்கான நேரடித் தேர்தல்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.