பிலிப்பைன்ஸ் நாட்டில் தென் சீனக் கடலை நோக்கிச் செல்லும் மோலோ சூறாவளி, மணிலாவின் தெற்கே உள்ள தீவுகளின் வழியாக நேற்று இரவு பயணித்தது. சுமார் 125 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பலரும் பள்ளிகள், விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு உணவு அளிக்கப்படுகிறது.
திடீரென அடித்த பலத்த காற்றில் மரங்கள் கீழே விழுந்ததில் சாலைப் போக்குவரத்து தடைபட்டது. அவற்றைச் சீரமைக்கும் பணியில் அலுவலர்களும், ஊழியர்களும் ஈடுபட்டுவருகின்றனர். பல நகரங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மக்கள் இருளில் தவித்துவருகின்றனர்.
கிழக்கு மாகாணமான கேடாண்டுவானில், வார இறுதியில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், வீடு திரும்பாததால் அவர்கள் காணாமல்போயுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல்,மணிலாவிற்குத் தெற்கே படங்காஸ் மாகாணத்தில் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. அதில், பயணித்த எட்டு பேரில் ஏழு பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும், ஒருவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அதன்படி, தற்போதுவரை 13 பேர் மோலோ சூறாவளியால் காணாமல்போயுள்ளனர்.
ஆண்டுதோறும் சுமார் 20 சூறாவளி, புயல்களைச் சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில், நிலநடுக்கமும், எரிமலை வெடிப்பும் அவ்வப்போது ஏற்படும். உலகின் மிக அதிக பேரழிவுக்குள்ளான நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்றாகும்.