பாகிஸ்தானின் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனமான பி.ஐ.ஏ தற்போது பெரும் சர்ச்சைக்கு ஆளானது. கரோனா லாக்டவுன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் பாகிஸ்தானியர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானிகளுக்கு லைசென்ஸ் பெறுவது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் நுழையக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த விமான பாதுகாப்பு ஆணையம் அண்மையில் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 141 விமானிகள் போலி லைசென்ஸ் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பாவுக்கு நுழையத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
ஏற்கனவே, கரோனா லாக்டவுன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து மூன்று மாத காலம் முடங்கியிருந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு மேலும் அந்நாட்டிற்கு சுமையை அதிகரித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதற்கு சர்வதேச அமைப்புகள் தயங்கிவருகின்றன. அதைத்தொடர்ந்து அடுத்த நெருக்கடியாக விமானப் போக்குவரத்து தடை உருவாகியுள்ளது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பதற்றத்தை குறைக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது - சீனா