கோவிட்-19 பரவல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. கரோனாவுக்கு இன்னும் முறையான தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்படாததால் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு தடுப்புமருந்தை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புமருந்து சோதனையில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் மூன்றாம்கட்ட மருத்துவ சோதனைகள் நிறைவடையும் முன்னரே ரஷ்யா ஸ்புட்னிக் v என்ற தடுப்புமருந்தை மனிதர்கள் மீது பயன்படுத்த அனுமதியளித்தது.
அதேபோல சீனாவும் குறைந்தது மூன்று கரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதியளித்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள போதும் மறுபுறம் மூன்றாம் கட்ட சோதனைகளையும் சீனா மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், சீனா உருவாக்கியுள்ள கோவிட்-19 தடுப்புமருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் பாகிஸ்தானில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் அமர் இக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை (செப். 21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமர் இக்ரம், "நாடு முழுவதும் 8,000 முதல் 10,000 தன்னார்வலர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்படும். இதன் இறுதி முடிவுகள் சுமார் ஆறு மாதங்களில் தெரியவரும்.
இந்தத் தடுப்புமருந்து ஏற்கனவே விலங்குகள் மீது பரிசோதிக்கப்பட்டது. அதில் இந்தக் கரோனா தடுப்புமருந்து பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது. மேலும், இது மனிதர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
பாகிஸ்தானில் தற்போதுவரை 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6,420 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: நாசியில் ஸ்ப்ரே மூலம் செலுத்தப்படும் கரோனா தடுப்புமருந்து - சீனா ஒப்புதல்!