பாகிஸ்தான் நாட்டின் சிந்த் மாகாணத்தைச் சேர்ந்த இந்து பெண் ரேணுகா குமாரி. இவர், சுக்கூர் நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்றுவருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி மாணவி ரேணுகா கல்லூரியிலிருந்து வீடுதிரும்பில்லை என பாகிஸ்தான் இந்து பஞ்சாயத் என்ற அமைப்பு முகநூலில் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து ரேணுகாவின் சகோதரர் விக்னேஷிடம் கேட்டபொழுது, "ரேணுகா தன் கல்லூரியில் படிக்கும் சக மாணவரான பாபர் அமான் என்பவரை காதலித்துவந்தார். இருவரும் தற்போது சியால்கோட்டில் இருக்கிறார்கள்" என்றார்.
எனினும், மாணவி ரேணுகாவை, அமான் கடத்திச் சென்று இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்திருக்கலாம் என்றும், இவரும் தற்போது பாகிஸ்தான் தரீக்-இ-இன்சாஃப் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், அமானின் சகோதரரை சனிக்கிழை இரவு கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர்.
இதேபோன்று, ஜக்ஜித் கவுர் என்ற 19 வயது சீக் பெண் ஒருவரை அடையாம் தெரியாத நபர்கள் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, இஸ்லாமிய நபருடன் திருமணம் செய்துவைத்த சம்பவம் உலகளவில் சீக் மதத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.