பாகிஸ்தானில் கோவிட் -19 வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. ஏற்கனவே இந்த கோவிட் -19 வைரஸ் தொற்றால் ஆறு பேர் உயிரிழந்திருந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் இன்று ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 57 வயதான நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாணத்தின் சுகாதாரத்துறை அலுவர் கைசர் அசிஃப் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, பஞ்சாப்பில் இன்று மேலும் 16 பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், அந்த மாகாணத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது. எனவே கோவிட் -19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 31 வரை அனைத்து பயணிகளின் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை பாதுகாக்க ராணுவத்தினரை குவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. முன்னதாக இந்திய பிரதமர் மோடியை போல தன்னால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவிக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். அந்நாட்டில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 394 பேருக்கும், பலூசிஸ்தானில் 110 பேருக்கும், கைபரில் 38 பேருக்கும், இஸ்லாமபாத்தில் 15 பேருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 81 பேருக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மனிதனாக இருக்க வேண்டிய நேரம் இது; இந்து-இஸ்லாமியராக அல்ல'