இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, தார்பார்கர் மாவட்டத்தின் நகர்பார்கர் வட்டத்திற்கு ராணுவ வீரர்களுடன் சென்றிருந்தார்.
வீரர்களுடனான கலந்துரையாடலின்போது, அவர்களின் மன வலிமையைப் பாராட்டினார். மேலும், கொடுக்கப்பட்ட பணியை முழுமையாக நிறைவேற்றுவதற்கான ஊக்கத்தையும் அவர் கொடுத்தார்.
இந்துக்களைக் காப்பது பாகிஸ்தானின் கடமை
அனைத்து வீரர்களும் தங்களது தொழில்சார் கடமைகளில் கவனம் செலுத்துமாறும் கமர் ஜாவேத் அறிவுரை வழங்கினார். வருகின்ற எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு பதிலடி கொடுப்பதற்கான பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் அங்குள்ள உள்ளூர் இந்து சமூகத்தினரைச் சந்தித்த அவர், பாகிஸ்தானின் சிறுபான்மையினர் சம குடிமக்கள் என்றும், அவர்களைப் பாதுகாப்பது நாட்டின் கடமை என்றும் கூறினார்.
நாட்டில் சிறுபான்மையினருக்குப் (இந்துக்கள்) பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்து சமூகத்தினர் ஒப்புக்கொண்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்துக்கள்
இந்து சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முழு ஆர்வத்துடன் பங்களிப்பைச் செலுத்துவதாக உறுதியளித்தனர். தலைமைத் தளபதியின் வருகையின்போது கராச்சி படைத்தளபதி, பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ஜெனரல் (Pakistan Rangers (Sindh) Director General) உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி